Friday, April 23, 2010

தாய் தந்த சீதனம்! (சத்தியமா சுட்டது )

சில நேரங்களில் எங்கேயோ நாம் கேட்ட கதைகள், சம்பவங்கள், விஷயங்களைப் படிக்கும்போது 'ச்சே... இதை முன்கூட்டியே படிச்சிருந்தா, என் விஷயத்துல கொஞ்சம் நிதானமா நடந்திருப்பேனே' என்று நினைக்கத் தோன்றும். அப்படி நம்மை நாமே செதுக்கும் உளியாக சமீபத்தில் நான் படித்து ரசித்த கதை இது.

ஜூலி-சாலமன் இருவரின் திருமணத்தன்று, புதிதாகத் தொடங்கிய வங்கிக் கணக்குப் புத்தகத்தை நீட்டிய ஜூலியின் அம்மா, ''நீ சந்தோஷமா இருக்கிறப்பல்லாம் உன்னால எவ்வளவு பணம் போட முடியுமோ போட்டு வை. அப்படியே என்ன காரணத்துக்காக பணம் போட்டியோ... அதை, பாஸ்புக்குல இருக்கற ரிமார்க்ஸ் ஏரியாவுல எழுதி வை" என்று சொன்னார். மகளின் திருமண சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில் 2,000 ரூபாயையும் அதில் டெபாஸிட் செய்திருந்தார்.

''நல்ல ஐடியாவா இருக்கே... நாம ரெண்டு பேருமே இந்த அக்கவுன்ட்டில் பணம் போடலாம்" என்று தானும் உற்சாகமாகிவிட்டார் சாலமன்.

'ஜனவரி 800 ரூபாய் - ஜூலியின் பிறந்த நாள். பிப்ரவரி 1,000 ரூபாய் - சாலமனுக்கு புரமோஷன். மார்ச் 400 ரூபாய் - கொடைக்கானல் ஜாலி ட்ரிப் போன சந்தோஷம். ஏப்ரல் 1,000 ரூபாய் - சாலமனுக்கு பிறந்த நாள். மே 3,000 ரூபாய் - நான் அப்பாவாகப் போற இரட்டிப்பு சந்தோஷம்'

- இப்படி நான்கு ஆண்டுகள் சந்தோஷமாகக் கரைந்து கொண்டிருந்த சூழலில், திடீர் சூறாவளி! காரணம் இல்லாமலே அடிக்கடி சண்டைகள் வெடிக்க, ஒரு கட்டத்தில் அம்மாவுக்கு போன் செய்த ஜூலி, ''இனியும் இவரோட குடும்பம் நடத்த முடியாது. இவரைப் போய் எப்படிம்மா எனக்குக் கட்டி வெச்சீங்க" என்று புலம்பினாள்.


ஆயிரம் சமாதானங்களும் எடுபடாத நிலையில்... ''ஓ.கே... நீ விரும்பின மாதிரி உனக்கு டைவர்ஸ் வாங்கித் தந்துடறேன். அதுக்கு முன்ன நீ ஒண்ணு செய்யணும். உனக்கு கல்யாணத்தன்னிக்கு நான் கொடுத்த பாஸ் புக்குல போட்ட பணத்தை எல்லாம் முதல்ல பேங்க்ல இருந்து எடுத்துடு. உன் கல்யாணச் சுவடா எதுவுமே இருக்கக் கூடாது" என்றாள் அம்மா.

வங்கி க்யூவில் நின்றபடியே மெதுவாக பாஸ் புக்கை புரட்டிய ஜூலி, ஒவ்வொரு டெபாஸிட் பற்றியும் எழுதப்பட்டிருந்த அந்த சந்தோஷ நினைவுகளைப் படித்துக் கொண்டே போக, இமை மீறியது கண்ணீர்! 'எனக்கு இத்தனை சந்தோஷங்களைத் தந்திருக்கிறாரா சாலமன்!' என்று நினைத்தவள், சட்டென்று வங்கியைவிட்டு கிளம்பி ஓடினாள். ''இந்த பாஸ்புக்ல இருக்கிற பணத்தை செலவழிச்ச பிறகு நாம டைவர்ஸ் பண்ணிக்கலாம்" என்று சாலமனிடம் கொடுத்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் கிளம்பினாள்.


மறுநாள்... கையில் பாஸ்புக்குடன் வாசலில் நின்றான் சாலமன். ஓடி வந்து அதை வாங்கி பார்த்தவள், அப்படியே அவனை இறுகக் கட்டிக் கொண் டாள்.

பாஸ்புக்கில் இருந்தது - 'டிசம்பர் மாதம் 5,000 ரூபாய்- மனைவியுடனான மோதல் முற்றுப்புள்ளிக்கு வந்த நாள்.

1 comment: